புதன், 12 நவம்பர், 2008

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -4


·பிரெடெரிக் மின்வியெல் பிரான்சு நாட்டின் வடபகுதியான பிரெத்தாஞ் பிரதேசத்தைத் சேர்ந்த லொரியான் நகரத்தில் பிறந்தவர், செங்கீரைத் தொடங்கி தண்டுக்கீரையாகும் வரை- பிரான்சிலிருந்தவர். பச்சைத் தமிழர் என்பதுபோல பச்சை பிரெஞ்சர். னால் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி, இனி நீ பிரெஞ்சுக்காரனில்லை என்று பிரான்சுநாட்டின் தற்போதைய வலதுசாரி அரசு அறிவித்துவிட்டது. எதிர்கட்சிகள் குறிப்பாக இடதுசாரிகள் அரசாங்கத்தின் முடிவு பாரபட்சமானது, மனிதருள் வேற்றுமை பாராட்டும் குணம் என கடுமையாக விமர்சிக்கிறார்கள். அப்படி பிரடெரிக் செய்த குற்றம்தானென்ன? ஹாலந்து நாட்டிற்குச் சென்ற அவர் 1997 ம் ண்டிலிருந்து தனக்குப் பிடித்த ஒருவரோடு வாழ்ந்தார், அந்த ஒருவரை ஐந்து வருடங்களுக்குப்பிறகு, அதாவது கடந்த டிசம்பர் மாதம் 2003 அன்று முறைப்படி பதிவு திருமணமும் செய்துகொண்டார். ஹாலந்து அரசு தனது நாட்டின் பிரஜையை மணந்தவருக்கு, அந்நாட்டின் சட்டப்படி குடியுரிமையை வழங்கிவிட்டது. பிரெஞ்சு அரசாங்கமும் தனது 26-07-2006 குடியுரிமைச் சட்டம் 21-2 உட்பிரிவின் படி, பிரெஞ்சு குடியுரிமையுள்ள ஒருவர் சில நிபந்தனைகள் பேரில் தனது மனைவிக்கோ அல்லது கணவருக்கோ குடியுரிமை கோர அனுமதிக்கிறது: பிரெஞ்சு குடியுரிமை வேண்டுகிற நேரத்தில் தம்பதிகள் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் (1) பிரான்சிலென்றால் குறைந்தது நான்காண்டுகள் (2) வெளிநாடுகளிலென்றால் குறைந்தது ஐந்தாண்டுகள். அதன்படி டிசம்பர் மாதம் 2003 அன்று திருமணம் செய்துக்கொண்ட பிரெஞ்சு பிரஜையான ·பிரடெரிக் தான் திருமணம் செய்துகொண்டவருக்காக குடியுரி¨மையைக் கேட்டு பிரெஞ்சு அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். னால் மனுவைப் பரிசீலித்த அரசு, சம்பந்தப்பட்டவருக்கு அதாவது மனுதாரர் மணமுடித்த நபருக்குக் கொடுக்கவேண்டிய பிரெஞ்சு குடியுரிமையை மறுத்ததோடு, மனுதாரருடைய பிரெஞ்சு குடி உரிமையும் பறித்துக்கொண்டது. நடந்தது இதுதான். மனுதாரராகிய ·பிரெடெரிக் ஓர் ண், அவர் ஹாலந்தில் ஒரு பெண்ணை மணந்திருந்தால் பிரெஞ்சு அரசின் சட்டப் படி, அவரது மனைவிக்குக் குடியுரிமைக் கிடைத்திருக்கும், மணந்திருப்பது மற்றொரு ணை. எனவே அவரது துணைவருக்குக் கொடுக்கவேண்டிய குடியுரிமையை மறுத்ததோடு அல்லாமல் பிரான்சு நாட்டின் நியதிகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு - விதிப்படி- பிரெஞ்சு அரசாங்கம் ·பிரடெரிக்குடைய குடியுரிமையையும் பறித்துக்கொண்டது.
அரசாங்கத்தின் இம்முடிவுக்கு எதிர்கட்சிகள், மனித உரிமை அமைப்புகளென என பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் குடியேற்றத்துறை அமைச்சகம், இப்பிரச்சினையை மீண்டும் முறைப்படி பரிசீலிக்க இருப்பதாகவும், ஹாலந்து நாட்டிற்கும்- பிரான்சுக்குமான உறவின் அடிப்படையில் சில விதிகளைத் தளர்த்தி 2009ம் ண்டு மீண்டும் ·பிரடெரிக்குக்குக் குடியுரிமை வழங்கப்படுமென்றும் உத்தரவாதம் அளித்திருக்கிறது. ·பிரெடெரிக் மின்வியெல், அரசின் இம் முடிவு தனக்குத் திருப்தி அளித்திருப்பதாகவும், ஒரினத் திருமணத்தை அங்கீகரிக்கும் ஹாலந்து நாட்டின் சட்டத்தை பிரெஞ்சு அரசு மதிக்கவேண்டுமென்றும், கேட்டுக்கொண்டிருக்கிறார். கூடுதலாக, நான் கத்தோலிக்கர் பிரிவினைச் சார்ந்தவன், வலதுசாரி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சார்க்கோவுக்கு ஓட்டுப்போட்டவனென்று, புலம்பல் வேறு. சர்க்கோ என்று அழைக்கப்படுகிற சர்க்கோஸி தற்போதைய பிரான்சு நாட்டின் ஜனாதிபதி, தேர்தலுக்கு முன்பு எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நிறைய வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு பிரெஞ்சு மக்களின் ஏகோபித்த வெறுப்புக்கு ளாகியிருப்பவர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கிற மேற்கத்திய நாடுகளிடையே பல விஷயங்களில் கருத்து முரண்பாடுகள் உண்டு. ஜூலை 26, 2006 தேதியிட்ட பிரெஞ்சு குடியுரிமைச் சட்டத்தின் 21-2 உட்பிரிவு அதற்கொரு நல்ல உதாரணம். பிரெஞ்சு சட்டம் ஓரினத் திருமணத்தை ஏற்பதில்லை. மாறாக ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளில் ஹாலந்து உட்பட ஸ்பெயின், இங்கிலாந்து, பெல்ஜியம் முதலான நாடுகள் அதனை அங்கீகரிக்கின்றன. பிரெஞ்சு ஜனாதிபதி, தேர்தலுக்கு முன்பு அளித்த தொலைக்காட்சி பேட்டியொன்றில்(செப்-2006), "ஓரினச்சேர்க்கை மனிதருக்கிடையேயான அன்பையும் காதலையும் புரிந்து கொள்ளவேண்டும், அவர்களின் திருமண ஒப்பந்தங்களை நாம் முறைபடுத்துவதன் மூலம், சமூகம் மற்றும் வருமானவரி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றார். தேர்தலில் ஜெயித்து ஜனாதிபதியாக வந்த பிறகு, அவரது அரசாங்கம் இதனைக் கவனத்தில் கொள்ளாமலிருக்கிறது. வலதுசாரிகளான அவரது கட்சியினரும் அதற்கு தரவானவர்களல்ல. இதற்கிடையில் பசுமை அமைப்பினர் நிருவாகத்தின் கீழிருந்த நகரசபை ஒன்றின் மேயர், இப்படித்தான் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஓரினச்சேர்க்கை மனிதருக்கிடையே திருமணத்தை நடத்திவைக்க, அத்திருமணம் சட்டப்படி செல்லாதென்று பிரெஞ்சு நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனினும் பிரான்சில் 60 சதவீத மக்கள் ஓரினச்சேர்க்கை மனிதர்களுக்கிடையான திருமணத்தை தரிப்பதாகக் சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. ஓரினச்சேர்க்கைத் திருமணத்தைக் காரணங்காட்டி பிரெஞ்சு குடியுரிமையை தனது சொந்த மண்ணைச் சேர்ந்த ஒருவருக்கு அரசாங்கம் மறுக்க, களவாய் உழைத்துக்கொண்டிருக்கும் ப்ரிக்கத் தொழிலாளர்களுக்கு உழைப்பதற்கான உரிமத்தை வழங்கி - அப்படி வழங்காதுபோனால் அவர்கள் செய்கிற வேலைகளை செய்ய பிரெஞ்சுகாரர்கள் முன் வரமாட்டார்களென்பதால்- மற்றொரு பக்கம் அரசாங்கம் தனக்கேற்பட்டப் பழியைக் துடைத்துக் கொள்ள முயன்று வருகிறது. இப்போதைக்கு அரசு பறித்த பிரெஞ்சு குடியுரிமையை மீண்டும் 2009 திரும்ப அரசு ஒப்படைக்குமென்பது றுதல்.
கடந்த சில ண்டுகளாகவே பிரான்சில் அந்நியர் குடியேறுவதைத் தடுக்க பிரெஞ்சு அரசு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்துவந்த போதிலும், மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு அந்நியர்கள் வாழ்கிற நாடுகளில் ஒன்றெனக் பிரான்சைக் கருதலாம். அவ்வாறே பிரெஞ்சுக்குடியுரிமைகளுக்கான சட்டங்களும் அத்தனைக் கடுமையானதல்ல. 1999லிருந்து-2004வரை ஐந்து ண்டுகளில் குடியேற்ற மக்களில் (சியர்கள், ப்ரிக்கர்கள், ப்ரிக்க அராபியர்கள்...)பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 410 000 என்று சொல்லப்படுகிறது. இதில் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களும் அடக்கம். இந்தியத் தமிழர்களில் 99 சதவீதம் பிரெஞ்சுக் காலணியாகவிருந்த புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்தவர்கள். இவர்களில் ஒரு சில குடும்பங்கள் 1881 சிறப்பு ணையின்கீழ் வெகுகாலத்துக்கு முன்பு பிரான்சுக்கு குடியேறிவர்கள், இவர்கள் பல தலைமுறைகளாக தாங்கள் தமிழர்கள் என்பது உட்பட எல்லாவற்றையும் மறந்து வாழ்பவர்கள். அடுத்து 1956ம் ண்டு பிரெஞ்சு அரசு இந்தியாவிடம் தனது காலனிகளை ஒப்படைத்தபோது, பிரெஞ்சு குடியுரிமையை சுவீகரித்து வந்தவர்கள். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை பிரான்சில் குடியேற 1983 இனக் கலவரம் காரணமென்பது பலரும் அறிந்ததே. புதுச்சேரி மற்றும் காரைக்கால் தமிழர்கள் இந்தியர்களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள், சொந்த நாட்டிற்கு என்றைக்குத் திரும்பலாம் என்றிருக்கிற இலங்கைச் சகோதரர்களிடமுள்ள தமிழர்கள் அடையாளம் இந்தியத் தமிழரிடத்தில் குறைவு.
இந்திய அரசாங்கம், நாட்டிற்கு வந்து போகிற இந்திய வம்சாவளியினருக்கென்று ஒரு கொள்கை வைத்திருக்கிறது, அதாவது நீ அரிசியைக் கொண்டுவா, நான் உமியைக் கொடுக்கிறேன் இருவரும் பகிர்ந்து சாப்பிடுவோம் என்பது அக்கொள்கைக்கான எழுதப்படாத விதி. 2005 ம் ண்டு, அந்நிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கூட்டிய பார்வஸி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியப் பிரதமர் இரட்டைக்குடியுரிமையைப்( Dual Citizenship) பற்றி அறிவித்தார். னால் இந்தியக் குடியுரிமைத் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தம் திருப்தி அளிக்கும்படியில்லை. இப்போது Overseas Citizenship of India என்ற சொல்லை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் சொல்வதென்றால் கடல் கடந்த இந்தியர் அல்லது அயல்நாட்டு இந்தியர். 1955ம் ண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் திருத்தப்பட்ட மசோதாவில் (ஜூன் 28,2005), இப்புதிய விளக்கத்தின்மூலம் இரட்டைக் குடியுரிமை வழங்கியுள்ளதைப்போல இந்திய அரசு பாசாங்கு செய்திருக்கிறது. ஒருசில நாடுகளைத் தவிர்த்து பிறவற்றில் பல ண்டுகளாக வசித்துவரும் இந்திய வம்சா வளியினருக்கு, அவர்களுடைய குடியேற்ற நாடுகளின் சட்டங்கள் அனுமதிக்குமென்றால் OCI அத்தாட்சியுண்டு. பிற நாடுகளில் உள்ளதைப்போன்று இரட்டை குடியுரிமையாக நினைத்துக்கொண்டு OCI வரத்திற்குச் சந்தோஷப்பட முடியாது: முன்பெல்லாம் வெளிநாட்டுக் குடியுரிமையுள்ள எங்களைப்போன்றவர்கள் இந்தியா வருவதென்றால் மூன்றுமாதம், றுமாதம், ஒரு வருடமென்று விசா வாங்கவேண்டியிருக்கும், இப்போது யுள் முழுக்க விசா வாங்காமல் வந்துபோகலாம், அது சம்பந்தப்பட்ட துறையை இந்திய பாஷையில் கண்டுகொள்ளவேண்டிய நிர்ப்பந்தங்கள் இனியில்லை, பெரிய சௌகரியமென்றால் இதுதான். அடுத்து நிதி, தொழில், கல்வித் துறைகளில் (விவசாய நிலங்கள், பண்ணை நிலங்கள் நீங்கலாக) சலுகைகள் என்றபேரில் சில காரட்டுகளைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள், நாங்கள் ஓடிவருகிறோம்.-------------------------------------------------------------------நன்றி: யுகமாயினி

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3

என்ன இருந்தாலும் அந்தக்காலம் போல வருமா? என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்கிற பெருசுகளை திருப்தி பண்ணனுங்கிறதுக்காகவே நடந்திருக்கணும். நாள் 24-4-2008, சம்பவம் நடந்த இடம் பிரான்சு நாட்டின் மேற்கிலுள்ள உலகப் புகழ்பெற்ற மர்செய் துறைமுகப்பட்டினம். 1930லிருந்து -1960 வரை அமெரிக்காவின் நிழல் உலகத்தை ட்டிப்படைத்ததில் மர்செய் விருமாண்டிகளுக்குப் பெரும்பங்குண்டு. சிரியா, துருக்கி, இந்தோ- சீனவிலிருந்து மார்·பினை இறக்குமதிசெய்து அதை ஹெரோயினாக புடம்போட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்து தாதாக்களுக்கெல்லாம் இலக்கணம் கற்பித்த போல்கர்போன்(Paul Carbon) விட்ட அம்பில் அமெரிக்கா தூக்கமின்றி தவித்ததும் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரான்சு தீவிர நடவடிக்கையெடுத்து தாதாக்களை களையெடுத்ததும் வரலாறு. எழுபதுகளில் வெளிவந்து சக்கைபோடுபோட்ட பிரெஞ்சு கனெக்ஷன் திரைப்படத்தை எப்போதாவது பார்க்கநேர்ந்தவர்களுக்கு (மர்செய்) ஸ்தல மகிமை புரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை என்பது மாதிரி, ஸ்தல பெருமையைக் காப்பாற்ற அப்போதைக்கப்போது ஏதாவது நடக்கத்தான் செய்கிறது.
இந்தியச் செய்தித்தாள்கள் இப்போதெல்லாம் தங்கள் நிருபர்களைச் செய்தி சேகரிக்கவென்று எங்கும் அனுப்பவேண்டாம் என்று நினைக்கிறேன்: சாலைவிபத்து, பா.மா.கா எதிர்ப்பு, வைகோ அறிக்கை, தே.தி.மு.க. கேள்வி, அ.தி.மு.க. ர்பாட்டம், மார்க்ஸிஸ்டுகள் போராட்டம், முதல்வர் கையெழுத்தென்று தலைப்புகளில் அவ்வப்போது சில சொற்களையும், தேதிகளையும் மாற்றிக்கொண்டால் போதும் நாளிதழ் ரெடி. இதற்கு முந்தைய வியாழக்கிழமை அதாவது 24-04-08 அன்று தமிழ் தினசரியொன்றில் மேற்கண்ட வழக்கமான புலம்பல்களுக்கிடையே தசாதாவரம் கேசட் வெளியீட்டுக்கு ஜாக்கிசான் வருகை என்றொரு சுவாரஸ்யமான செய்தி. நிருபர்களிடம் அமிதாபச்சனா யார்? சென்னை தண்ணீரா? வேண்டாம், என்று அவர் திருவாய் மலர்ந்ததாகத் தகவல். அடுத்த மாதம் ஹாங்காங்கில் கொஞ்சம் மாற்றிக் கேட்டா¡ல், கமலஹாஸனா யார்? தமிழ் சினிமாண்ணு ஒன்றிருக்கா? என்று அவர் மறுபடியும் ச்சரியப்படக்கூடும். தேவையா? திரைப்படப் பாடல் வெள்¢யீட்டிலெல்லாம் ஒரு முதலமைச்சர் கலந்துகொள்ளும் அதிசயம் உலகில் வேறெங்காவது நடப்பது சாத்தியமா என்பது இருக்கட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் சத்தியமாக நடக்காது. னால் பிரான்சில் மர்செய் புறநகரில் கடந்த 24-04-08 நடந்ததாகப் படித்த சம்பவம் அதைவிடக் கொஞ்சம் சுவாரஸ்யமானது:
இரவு எட்டுமணி. விட்டகுறை தொட்டகுறைண்ணு குளிர்காலம் விடாமல் துரத்திக்கொண்டிருக்கும் ஏப்ரல் மாதம், எழுநூறு மீட்டர் நீளமுள்ள கூட்ஸ் இரயிலில் வழக்கம்போல தனியொரு ளாக எஞ்சின் டிரைவர், கைகளை அதன்போக்கிலே அலையவிட்டபடி அமர்ந்திருந்தார். பாதையில் பிரச்சினையில்லை என்பதன் அடையாளமாக சமிக்ஞை விளக்குகள் பச்சை வண்ணத்தில் கண் சிமிட்டுகின்றன. புறப்படுவதற்கு முன்னால் அலுவலகத்திற்குச் சென்று தேவையான தகவல்களை ( விதிமுறைகளில் உள்ள புதிய மாற்றம், கடைசி நிமிடத்தில் பாதையில் ஏதேனும் மாற்றமிருந்தால் அதைப்பற்றிய தகவல்கள், ஓட்டவிருக்கும் இரயில் எஞ்சின் குறித்த தகவல்கள், டேஷ்போர்டு பற்றிய வணங்கள்) ஒரு முறை புரட்டிவிட்டு, கையில் எடுத்துக்கொண்டுதான் புறப்பட்டிருந்தார். இன்னும் முப்பது கி.மீ தூரம் ஓடினால் வேலை முடிந்தது, வழக்கம்போல அலுவலகத்தில் கையிலிருப்பதை ஒப்படைத்துத்துவிட்டு, ஸ்டேஷனின் காத்திருக்கும் சமீபத்திய காதலியை ரத்தழுவி அவசரமாய் ஒர் இருபது சதவீத காதலை வெளிப்படுத்திவிட்டு மற்றதை உறங்காமலிருந்தால் பின்னிரவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம். இரண்டு வாரமா எதிர்பாத்துக்கொண்டிருக்கேன், என்னை மறந்திடாதய்யாண்ணு, சின்னவீடு கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியிருத்த சந்தோஷம் மனசிலும் உடம்பிலும் எக்குத்தப்பா என்னென்னவோ பண்ணுது. வண்டியின் வேகம் நிதானத்திற்கு வந்திருந்தது. தூரத்தில் நிலவொளியில் தண்டவாளத்தில் நிழலாய் ஏதோ கிடக்கிறது, மனப்பிராந்தியோ என்று ஒதுக்கினார், னால் நெருங்க நெருங்க பொதியாய்க் கிடந்த நிழலுக்கு, வடிவம் கிடைத்திருந்தது. மரக்கட்டைகளும், உலோகங்களும், தண்டவாளத்தின் குறுக்கே கிடக்கின்றன. மூளை விடுத்த எச்சரிக்கையை, கைகள் புரிந்துகொண்டு எஞ்சினை நிறுத்த ஒரு சில வினாடிகள் பிடித்தன. எஞ்சினை விட்டு இறங்கிய ஓட்டுனர் அதே அவசரத்துடன் எஞ்சினுக்குள் ஏறி கதவை அடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. காரணம் தண்டவாளத்துக்கருகே காத்திருந்த கொள்ளையர் கும்பல். ஷோலே காலத்து கொள்ளையர்பாணி. தகவலைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்துவிட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு(?) காத்திருந்தார். வந்த கும்பல் மளமளவென்று காரியத்தில் இறங்கியது. முதலாவது கண்டெய்னரின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள் ஒன்றுமில்லை; இரண்டாவதின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள் ஒன்றுமில்லை; மூன்றாவதின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள், ஒன்றுமில்லை; நான்காவது; ஐந்தாவது...ம்; இதென்னடா சோதனைண்ணு இஷ்டப்பட்டத் தெய்வங்களை வேண்டிக்கொண்டு றாவது கண்ட்டெய்னரின் பூட்டை உடைத்து கதவைத் திறந்ததில் அவர்களுக்குக் கிடைத்த தகவல்படி இருக்கவேண்டிய எலெக்ற்றானிக் பொருட்கள் இல்லையாம், இரவு நேரத்தில் கடவுள்மார்களின் நித்திரையைக் கலைத்ததின் பலனோ என்னவோ, இங்கே பரியை நரியாக்கிய கதையாக எலெக்ற்ரானிக் பொருட்களுக்குப் பதிலாக அத்தனையும் தலையணை உறைகள்-ஏமாற்றம். தகவல் கிடைத்து போலீஸ¤ம் வந்துவிட, காரில் ஏறி கொள்ளையர் கூட்டம் பறந்திருக்கிறது. நம்ம கூட்ஸ் டிரைவர் ஒரு மணி நேரம் கழித்து வண்டியை எடுத்துபோய் நிறுத்தவேண்டிய இடத்தில் நிறுத்தி, மற்ற அலுவல்கலையும் முடித்துவிட்டு காதலியைத் தேடி அலுத்துபோனது குறித்து வேண்டுமானால் ஒரு கதையாக்கலாம். னால் கொள்ளையர்கள் எதிர்பார்த்த கூட்ஸ்வண்டி அடுத்த அரைமணி நேரத்தில் எலெக்ற்றானிக் பொருள்களுடன் அவர்கள் காத்திருந்த பாதையிலேயே போயிருக்கிறது.
உலகமெங்கும் விலையேற்றம் இன்றைக்கு விபரீத பரப்பில் கால் வைத்திருக்கிறது. நடுத்தரவரக்கம் ஏழைகளாகவும், ஏழைகள் தரித்திரர்களாகவும் உருமாற்றம் பெறுவதற்கு உலகமயமாக்கம் தன்னாலான கைங்கர்யதைச் செய்துவருகிறது. மேற்கண்ட மர்செய் கொள்ளை முயற்சியைப் படித்தபோது உலகமயமாக்கலை நினைத்துக்கொண்டேன், அதுகூட அப்படித்தான். இப்படி எதையோ எதிர்பார்த்து கொள்ளை அடிக்கவந்தவர்கள் ஏதேதோ கதவுகளைத் திறந்துப்பார்த்து ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்து நிற்கிறார்கள், சரி றாவது கதவு? கடைசியில் சொல்கிறேன். முதன் முதலில் உலகமயமாக்கல் என்ற சொல்லை உருவாக்கியவர்களின் மனதில் வேறு கனவுகள் இருந்தபோதிலும் உலகில் ஒரு மூ¨லையில் இருக்கிற மனிதனின் அறிவும், செயல்பாடுகளும், மறுகோடியில் இருக்கிற மனிதனின் தேவைகளுக்குப் பரஸ்பரம் உதவிக்கொள்ளக்கூடுமென்று உத்தரவாதம் அளித்தனர். அதன் இயங்கு துறைகளென்று அரசியல், பொருளாதாரம், கலை பண்பாடென்று சித்தரிக்கப்பட்டது. உண்மையில் உலகமயமாக்கல் மூலம் தாங்கள் சிம்மாசனத்தில் அமரலாம் என்று மனப்பால்குடித்த மேற்கத்தியர்களும், அமெரிக்கர்களும் கன்னத்தில் கைவத்துக்கொண்டு சோர்ந்திருக்கின்றனர். இதில் இலாபம் பெற்றது சீனா. உலகமயமாக்கல் மூலம் உலகச்சந்தையை வளைத்துபோடலாம் என்று கனவுகண்ட மேற்கத்திய மற்றும் அமெரிக்க பணமுதலைகள், கம்யூனிஸ போர்வையில் சீனாவென்ற ஒற்றை முதலாளித்துவம் விஸ்வரூபமெடுக்குமென்று எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப் போலவே சீனாவின் உற்பத்திக்கூலி அதாவது அதிற் பங்கேற்கும் மனித சக்திக்கான ஊதியம் உலக அளவில் மிகக்குறைவானது. இந்தியாவில் ஏரியில் தூர் வாரவேண்டும் என்றால் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடத்தும் மக்களைப் பார்க்கிறோம். னால் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்களை வெளியேற்றவேண்டிய கட்டாயத்தில் உருவாகும் சீன நாட்டின் Three Gorges அணைக்கு எதிராக ஒரு காக்கை குருவி கூட அங்கே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதற்குப் பேருதான் கம்யூனிஸ சுதந்திரம். சீனாவில் அரசாங்கம் தீர்மானித்ததுதான் ஊதியம், கொடுப்பதுதான் கூலி, தவிர எல்லா கம்யூனிஸ்டு நாடுகளையும் போலவே வளர்ந்து வரும் நாட்டின் சுபிட்சங்களை அனுபவிக்கிறவர்கள் ஏழை சீனர்கள் அல்லர், கட்சித் தலைமையின் உறவினர்கள். சீன அரசாங்கத்திடம் பொதுவுடமை பேரால் குவிந்திருந்த தேசியச் சொத்துக்களை, முதலாளித்துவ கட்டமைப்புக்கு எழுதிகொடுத்தபோது சீன அரசே ஒரு இராட்சத முதலாளியாக அவதாரமெடுத்தது. தவிர பசுத்தோல் போர்த்திய புலியின் இப்புதிய அவதாரம், இதுவரை அரசின் பொறுப்பில் வைத்திருந்த மக்களுக்கான நலத்திட்டங்களைச் சுலபமாக அலட்சியப்படுத்த முடித்தது, தவிர மக்களின் வாழ்வாதாரத்திற்குச் செலவிட்ட தொகையும் மிச்சமானதால் பெரும் மூலதனங்களைக் குவித்துக்கொண்டு, புது பெருச்சாளி பழைய பெருச்சாளியை மிரட்டுகிறது. இன்றைக்கு உலக அளவில் அந்நிய முதலீட்டில் முதலாவது நாடாக சீனா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. G7 நாடுகள் மூலதனங்களை ற்றில் போடலாமா? கடலில் கொட்டலாமா? என அலைந்துகொண்டிருக்க, நவீன தொழில் நுட்பம் சார்ந்த உலகச் சந்தையின் விலையையும், மேற்கத்திய மற்றும் அமெரிக்க தொழிற்சாலைகளின் தலைவிதிகளையும் தீர்மானிப்பவையாக இன்றைக்கு சிய நாடுகள், அதிலும் புற்றீசல்போல உலகச்சந்தையை மொய்க்கும் டூப்ளிகேட் சீனப்பொருட்களோடு விலையில் போட்டியிட இயலாமல் மேற்கத்திய தொழில்கள் முடங்கிவருகின்றன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. விலைவாசி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 30லிருந்து 40 சதவீதம் கூடியிருக்கிறது. உணவுப்பொருட்களை யாசகமாகப் பெற தொண்டு நிறுனங்களில் வாசலில் காத்துக்கிடக்கும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது.
சரி.. அமெரிக்க மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ கொள்ளையர் திறந்த றாவது கதவைப்பற்றி சொல்லலையே. அது வேறொன்றுமில்லை, குறைந்த ஊதியத்தில் இந்தியா மற்றும் சீனா உடபட உலக நாடுகளில் கிடைக்கும் மனித சக்திகளால் ஓரளவு இலாபம் பார்ப்பது. னாலும்...ம். உலகமயமாக்கல் சொப்பனத்திற் கண்ட அரிசி சோற்றுக்காகாதென்றுதான் நினைக்கிறேன். ------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: யுகமாயினி

வியாழன், 6 நவம்பர், 2008

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -2

Liberte? -Oui, Egalite? - Oui, Fraternite?.......
செவ்வியொன்றிற்கு எமெ செசேர் அளித்தப் பதிலைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். பிரான்சு நாட்டில் சுதந்திரமும் சமத்துவமும் இருக்கிறதென்றாவது ஓரளவு திருப்திபட்டுக்கொள்ளலாம் ( அவர் Oui- ஆம்- என்று சொல்லியிருந்தாலும் அதனை உச்சரித்தவிதமும், பார்வையில் தெறித்த எரிச்சலும் வேறாக இருந்தது) ஆனால் சகோதரத்துவம் என்ற சொல்லுக்கான பொருள் இங்கே கேள்விக்குறியாக இருக்கிறது என்பதுதான் அவர் சொல்ல வந்ததற்கான பொருள். எமெ செசேர் சமகால பிரெஞ்சு கவிஞர்களில் மிகமுக்கியமானவர், மிகை யதார்த்தவாதி, கவிஞர் ஆந்த்ரே பிரெத்தோனுக்கு நெருங்கிய நண்பர். Negritude என்ற சொல்லைப் படைத்தவர். உலகெங்குமுள்ள கறுப்பினமக்களின் ஏகோபித்த சுதந்திரமூச்சு. கடந்த ஏப்ரல் மாதம் 17ந்தேதி பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்றான மர்த்தினிக் பிரதேசத்தில் -அவர் பிறந்த இடத்தில் உயிர் பிரிந்தபோது, பிரான்சு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள், எதிர்கட்சி பிரமுகர்கள், படைப்பாளிகள், பிறதுறை சாரந்த விற்பன்னர்கள்ளென பலரும் கண்ணீர் சிந்தினர், நாடுமுழுக்க துக்கம் அனுசரிக்கப்பட்டது. வழக்கம்போல சிந்திய கண்ணீரில் முதலைகளுக்கும்(எங்குதானில்லை) பங்குண்டு- யார் மனிதர் எவை முதலையென்பது பரம்பொருள் அறிந்த ரகசியம் - ஆமென்.
நாகரீகத்திலும் பண்பாட்டிலும் வளர்ந்திருப்பதாக மனித இனம் மார்தட்டிக்கொள்ளும் இந்த நூற்றாண்டிலும், ஆதிக்கமும், அதிகாரமும்- திக்கற்ற பல மனித சமூகங்களின் மண்ணோடும், உணர்வோடும் இசைந்த வாழ்வியல் நெறிகளை, விழுமியங்களை ஓசையிடாமல் அழித்துவருகின்றன என்பது உலகமறிந்த உண்மை. அவை காப்பாற்றப்படவேண்டுமெனக் குரல் எழுப்புகிறவர்களும் இல்லாமலில்லை. கவிஞர் எமெ செசேர், ஒடுக்கப்பட்டவரினம், தம் மரபுகள் குறித்ததான மதிப்பீட்டில் நியாயமான அணுகுமுறையை வற்புறுத்தியவர். ஆக அவரது கவிதை, மற்றும் அரசியல் பங்களிப்பென்பது அவர் பிறந்த மண் சார்ந்தது, அதன் பண்பாட்டு உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டது. 'நான் ஒரு கறுப்பன், கறுப்பன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்', என்றவர்.
"எனது நீக்ரோகுணம் ஒரு பாறையோ அல்லது பகற்பொழுதின் கூக்குரலைக் காதில் வாங்காதவொரு ஜடமோஅல்ல எனது நீக்ரோகுணம் குருட்டு பூமியில் விழுகிற அமில மழையுமல்ல எனது நீக்ரோ குணம் உயர்ந்த கோபுரமுமல்ல பெரிய தேவாலயமுமல்ல அது பூமியின் செங்குருதியிற் தோயும் அது வானில் கஞ்சாப்புகையில் மூழ்கும் பொறுமையினாலுற்ற பொல்லாங்குகளை இனங் கண்டிடும்..." (Le cahier d'un retour au pays natal) எனத் தொடரும் இக்கவிதை அவரது மிக முக்கியமான படைப்புகளிலொன்று. எமெ செசேரைக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள அவர் பிறந்த மர்த்தினீக் பிரதேசத்தினைப் புரிந்துகொள்ளவேண்டும். மர்த்தினீக் பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான நான்கு கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்று, இதர பிரதேசங்கள்: குவாதுலூப், பிரெஞ்சு கயானா, ரெயூனியோன். இவற்றை நேற்றுவரை DOM-TOM(1) என்று அழைத்து வந்தவர்கள் சமீபகாலமாக DOM-ROM (2)ou DROM என்றழைக்கிறார்கள். பெயரிலும், அரசியல் சட்டத்திலும் கொண்டுவந்த மாற்றங்கள், அம்மண்ணின் பூர்விகக் குடிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியதா என்றால் இல்லை. இங்கே வருடமுழுக்க சூரியனுண்டு மக்களின் வாழ்க்கையில்தான் சூரியனில்லை. மேற்குறிப்பிட்ட நான்கு பிரதேசங்களும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின்கீழ் காலனிகளாக இருந்தவை, பிற காலனி நாடுகள் விடுதலை அடைந்தபோதும், கறுப்பின மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பிரதேசங்களை விடுவிக்காமல் பிரான்சு அரசு சொந்தமாக்கிக்கொண்டதற்கு முக்கிய காரணம் பூளோக ரீதியிலான அவற்றின் அமைப்பு. பிரதான பிரதேசத்திற்கு(Metropole)(3) அரசியல், பொருளாதாரம், ராணுவம் என பல முனைகளிலும் இலாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக அட்லாண்டிக், பசிபிக், இந்தியபெருங்கடலென்று சிதறிக்கிடக்கிற பல்லாயிரக்கணக்கான மைல்களைக்கொண்ட கடற்கரைப் பிரதேசங்களைப் பயன்படுத்திக்கொண்டு அணு ஆயுத சோதனைகள் நடத்தவும், வலிமை மிக்க கடற்படையை அமைத்துக்கொள்ளவும், உலக நாடுகளின் அரசியலை அருகிலிருந்து மோப்பம் பிடிக்கவும் முடிகிறது. பொருளாதார இலாபங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் சுற்றுலாத் துறையை மட்டும் நம்பி ஜீவிக்கிற நாடுகள் பல. அவற்றிற்குப் போட்டியாக இருக்கும் இப்பிரதேசங்கள்(DROM), பிரான்சு நாட்டுக்கு கொடுப்பது அதிகம், கொள்வது குறைவு. உலகமெங்கும் சுதந்திரம் சுதந்திரம் என்ற குரல் கேட்கிறதே, இங்கே என்னவாயிற்று என்ற சந்தேகம் எழலாம், "வெள்ளைக்காரனே தேவலாம்", என்று சொல்ல இந்தியாவிற் கேட்கிறேன். அப்படியான மன நிலையிற்தான் இவர்களைப் பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருக்கிறது. நிறைய பிரெஞ்சுக்காரர்களை அதாவது வெள்ளைத்தோல் மனிதர்கள் இப்பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்- பெரும் முதலாளிகள் இவர்கள்தான், ஓய்வு நேரங்களில் அவர்கள் அரசியலும் பார்க்கிறார்கள், உள்ளூர் மக்கள் அவர்களுக்குத் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு உள்ளூர் தலைவர்களும் உண்டு. தீமிதிக்கிற காவடி எடுக்கிற இந்திய வம்சாவளியினரையும் சேர்த்து பல்வேறு இனத்தவர்கள் கலந்து வாழ்கிறார்கள், உணர்வால், பண்பாட்டால் வேறுபட்ட மக்களை மேய்க்கச் சுலபமாக முடிகிறது. உதாரணமாக பிரெஞ்சுக் கயானாவில் தென் அமெரிக்காவிலுள்ள அத்தனை இனத்தவர்களும் இருக்கிறார்கள், ரெயூனியனை எடுத்துக்கொண்டால் ஆப்ரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், வட இந்தியர்கள், தமிழர்கள், இந்திய முஸ்லீம்கள்- பிறபகுதிகளிலும் அதுதான் நிலைமை, கூடுதலாக வியட்நாம், இந்தோனேசியா, மடகாஸ்கர் மக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். தவிர பிரான்சு அரசு நிர்வாகப் பிரதேசங்களையும் தந்திரமாக கலைத்துப் போட்டு ஆள்கிறது. ஆப்ரிக்க இனத்தவரான பூர்வீகமக்களுக்குக் குடியும் கூத்தும் வேண்டும், தங்குதடையின்றி கிடைக்கிறது, இப்பிரதேசங்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதெல்லாம் கண்துடைப்பே. பிரான்சிலுள்ள இதரப் பகுதிகளோடு ஒப்பிடுகிறபோது இங்குள்ள அவலம் விளங்கும்: ஐம்பது விழுக்காட்டிற்குக் கூடுதலான மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். மருத்துவ அடையாள அட்டையான -Carte Vitalஐ - மர்த்தினீக் வாசி அறிந்ததில்லை. பிராதான பிரதேசத்தில் ஏழைகளுக்கான மருத்துவச் செலவு(Couverture Medicale Sociale) முழுக்க முழுக்க அரசு சார்ந்தது, இப்பிரதேச மக்களுக்கு பட்டைநாமம். பிரெஞ்சு மெட்ரோபோலில் (Mainland) குறைந்த பட்ச தனி நபர் ஊதியம் 1300 யூரோ என்றால், இங்கே 600 யூரோ...உணவுப் பொருட்களுக்கான விலைகள் சராசரி Dom-Tom வாசியால் தொடமுடியாதவை. எல்லாவற்றிற்கும் மேலாக இப்பிரதேசங்களைச் சேர்ந்தமக்கள் அரசியல் சாசனப்படி பிரெஞ்சு குடிமக்கள், ஆனால் மெட்ரோபோலுக்கு அதாவது பிரதான பிரான்சு நாட்டுக்குள் நுழைகிறபோது அவர்களும் வேறு நாடுகளிலிருந்து பிரான்சுக்குப் பிழைக்கவந்த மக்கள்போலவே நடத்தப்படுகிறவர்கள்.
பிரெஞ்சு காற்பந்தாட்ட முன்னணி வீரர்களில் ஒருவரான லிலியாம் துராம் ஒரு முறை சொன்னது, " எங்கள் பிரதேசத்தில் இருக்கிறபோது பிரெஞ்சுக் காரன் என்ற நினைவுடன் இருந்தேன், ஆனால் மெட்ரோபோலுக்கு வந்ததும் அந்நியனாக உணருகுகிறேன்".
நன்றி: யுகமாயினி
-------------------------------------------------------------------------------------------------------1. Departement d'outre-mer - Territoire d'outre-mer.2. Depaartment Region d'outre-mer2. Metropole - Mainland

யாம் மெய்யாய் கண்டவற்றுள்-1

திராவிடர்களுக்கும் ஆப்ரிக்க மக்களுக்கும் உள்ள உறவு தெரிஞ்சதுதான், அதை நாம மறந்தாலும் அவங்க மறக்கமாட்டாங்கண்ணு நினைக்கிறேன், மூட்டை மூட்டையா டாலரை சுமந்து முதுகு கூன்போட்டுவிட்டது கொஞ்சம் இறக்கிவைக்கணும் பங்காளி, உன்னுடைய வங்கிக் கணக்கைக் கொடு என்று கேட்டு, வாரத்துக்கு நாலு மின்னஞ்சலையாவது அனுப்பிவைக்கிறார்கள். எல்லாக் கடிதங்களிலும் பொதுவாக ஒரு விஷயமிருக்கும், கடிதம் எழுதுகிறவன் கற்பனையா உருவாக்கின வங்கியிலே, மில்லியன் கணக்கிலே டாலரை வச்சிட்டு வாரிசில்லாம ஒருத்தன் செத்துபோனதாகவும், தனித்து உண்ணல் தகாது என்றுணர்ந்த ஆப்ரிக்க நண்பர், உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் நம்மைக் கண்டுபிடித்து(இளிச்சவாயனாக இருக்ககூடுமென்ற நம்பிக்கையில்), பகுத்துண்ண விரும்புவதாகவும், நம்ம அக்கவுண்ட் நெம்பரைக் கொடுத்தா பணமடையைத் திறந்து விடுவதாகவும் சத்தியம் செய்திருப்பார். இந்திய வம்சாவளியிலே வந்த நமக்கு இராமயனச் சகோதரர்களைக் காட்டிலும், மகாபாரதக் கௌரவர்களைத்தான் அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இந்த லட்சணத்தில் ஆப்ரிக்க பங்காளி தானதருமம் செய்ய முன்வந்தால் சந்தேகம் வரத்தானே செய்யும். அதிலும் அவர்கள் கற்பனையில் உதிக்கிற வங்கி ஒரு சுவிஸ் வங்கி அல்லது மேற்கத்திய வங்கியாக இருந்தாலும் ஓரளவு நம்பலாம். ப்ரிக்க கண்டத்தின் கடன்களில் ஐம்பது சதவீதத்திற்கு மேற்பட்டத் தொகையை, அந்நாடுகளின் தலைவர்கள்- சர்வாதிகாரிகள்- தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வெளிநாட்டுவங்கிகளில் போட்டுவைத்துள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது. இதற்கு மேற்கத்திய நாடுகளும் உடந்தை. அவர்கள் நாட்டில் (மேற்கத்திய) விலை போகாதப்பொருட்களையெல்லாம், மூன்றாம் உலக நாடுகள் தலையில் கட்டுகிறபோது சம்பந்தப்பட்டத் தலைவர்களையும் கவனிப்பது ஊரறிந்த ரகசியம். இந்தியா போன்ற நாடுகளில் நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போய்ச்சேருகிறதென்றால், ஆப்ரிக்க நாடுகளில் இறைக்கிற நீரெல்ல்லாம் புல்லுக்கு மட்டுமே பாய்கிற கொடுமையுண்டு. இங்கிலாந்து தனது நேற்றைய காலனி நாடுகளைக் குறித்து என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறதோ, பிரான்சைப் பொறுத்தவரை இன்றைக்கும் அவை காலனி நாடுகள்தான். பிரெஞ்சுக்காரர்களுடைய காலனி திக்கம் என்பது பதினேழாம் நூற்றாண்டில் ரம்பித்து இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை நீடித்திருந்தது எனலாம். காலனிய நிலப்பரப்பில் பிரிட்டன் மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்து மூன்றாவது இடத்தையே பிரான்சு பெற்றிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் வட அமெரிக்காவிலும், ஆசியாவிலும் தனது காலனி திக்கத்திற்கு வேரூன்றிய போதிலும், பிரெஞ்சுகாரர்கள் பெருமைகொள்ள முடிந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ரம்பம்வரை காலனி திக்கத்தின்கீழ் கொண்டுவந்த தென்கிழக்கு சிய நாடுகள், வட ப்ரிக்க நாடுகள் மற்றும் மத்திய ப்ரிக்க நாடுகளால். இன்றைய தேதிவரை குறிப்பாக மத்திய ப்ரிக்க நாடுகளைச்(மோரிட்டேனியா, செனெகல், மாலி, சாடு(Chad)...)சேர்ந்த மக்கள், பிரெஞ்சுக்காரர்களென்றால் முகம் சுளிப்பவர்கள் னால் அவர்களின் த¨லைவர்கள் பிரெஞ்சு நிர்வாகத்திற்கு அடிபணிகிறவர்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணத்தைச் சொல்கிறேன்.
'L'Arch de Zoe' என்பது பிரான்சில் 2004ல் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனம், நோக்கம் சுனாமியில் பாதிக்கப்பட்ட சிறுவர்களைத் தத்தெடுத்து, அவர்களது கடந்தகாலப் பண்பாட்டிற்குப் பாதகமின்றி வளர்த்து எதிர்காலத்திற்கு உத்தரவாதமளிப்பது. முதற்கட்டமாக சுமத்ராவிற்கு அருகில் Banda Aceh என்ற கிராமத்திற்கருகே ஒரு புணர்வாழ்வு இல்லம் அமைப்பது என்றெல்லாம் அறிவித்து அதை நடைமுறைப் படுத்தவும் முனைந்தார்கள். இந்தோனேசியாவிலிருந்து சுனாமியால் பாதிக்கபட்டிருந்த ஓர் அநாதைச் சிறுவனைப் பாரீஸ¤க்கு அழைத்துவந்து அவன் கால்களுக்குச் செய்யவேண்டிய அறுவைச் சிகிச்சையைச் செய்து செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பிடிக்க தொண்டு நிறுவனத்தின் மதிப்பு பிரெஞ்சு மக்களிடையே ஓங்கியே இருந்தது. இந்நிலையில் ஏப்ரல்(2007) 24ந்தேதியிட்ட தொண்டு நிறுவனத்தின் அறிக்கை டார்·பர்(1) உள்நாட்டுப்போரை, ஐக்கிய நாட்டுச் சபை அலட்சியம் செய்து, பல்லாயிரக் கணக்கானவர்கள் படுகொலைக்கு காரணமாகிவிட்டதென்று குற்றம் சாட்டியது. தொடர்ந்து, அநாதையாக்கப்பட்ட பத்தாயிரம் சிறுவர்களை அங்கிருந்து வெளியேற்றி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும், தத்தெடுக்க விரும்பும் குடும்பங்கள் தங்களோடு தொடர்பு கொள்ளவேண்டுமென்றும் அறிவித்தது. பலர் தொண்டு நிறுவனத்தின் போக்கே தவறு என்றார்கள், பல சட்ட சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார்கள், பிரெஞ்சு அரசாங்கமும் தமது 14-6- 2007 அறிக்கையில் Arche de Zoe தொண்டு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல், அதன் நடவடிக்கைகள் அரசின் சட்டதிட்டங்களுக்கு ஒத்ததல்ல என்று அறிவித்தது. னால் அடுத்தமாதமே- ஜூலையில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், மனித உரிமை மற்றும் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் Rama Yade டார்·பர் அநாதைச் சிறுவர்களுக்கு உதவ விரும்பும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் திட்டத்தைத் தெரிவித்தால், அரசு பரிசீலிக்குமென அறிவித்தார், அதன்படி று தொண்டு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை முன் வைத்தன, அவற்றுள் Arche de Zoe ஒன்று. பிரெஞ்சு அரசாங்கத்தின் தரப்பில் கஸ்டு 3,2007 அன்று மற்றொரு அறிக்கை. இம்முறை தொண்டு நிறுவனத்திற்கு நம்பி இறங்கும் குடும்பங்கள் எச்சரிக்கப்பட்டனர்: டார்·பர் களத்தில் இருக்கும் இதர அரசு சாரா நிறுவனங்கள் தொண்டு நிறுவனத்திற்கு தரவாக இல்லை என்பதோடு, பிரச்சினைக்குறிய பிள்ளைகள் அநாதைகளா இல்லையா என்பதையும் உறுதிசெய்ய முடியவில்லை என்றும், சூடான் நாட்டுச் சட்டமும் தத்து எடுப்பதற்கு தரவாக இல்லையென்பதால் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக நடந்துகொள்வது அவசியமென்றும் வற்புறுத்தியது. தொண்டு நிறுவனம் ரம்பத்தில் பணத்தைப் பற்றி பிரஸ்தாபிக்கவில்லையென்றபோதிலும் 300 குடும்பங்கள் தலா 2400 யூரோவை, குழந்தையொன்றிற்கு டார்·பிலிருந்து வெளியிற்கொண்டுவரும் செலவுக்கென கொடுத்திருந்தார்கள், (தற்போதைய தகவலின்படி கிட்டத்தட்ட 550000யூரோவை தொண்டு நிறுவனம் வசூல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது)
2007 அக்டோபர் மாதம் 24ந்தேதி, திட்டமிட்டபடி தத்தெடுத்தக் குழைந்தைகளுக்காக ஒரு சில குடும்பங்கள் பிரெஞ்சு விமான தளமொன்றில் காத்திருக்க, கடைசியில் ஏமாற்றத்தில் முடிந்தது. சூடான், சாடு பார்டர் எல்லையில் தொண்டு நிறுவனத்தினைச் சார்ந்தவர்களும் அவர்களுக்கு உதவிய மற்ற ஐரோப்பியர்கள், உள்ளூர் ஆட்கள்நான்குபேர் ஆக மொத்தம் பதினேழுபேரை சாடு அரசாங்கம் கைது செய்தது. அவர்கள் விமானத்தில் கடத்த முயன்றதாகச் சொல்லப்பட்ட சிறுவர் சிறுமியர் எண்ணிக்கை 103. இப்பிரச்சினையில் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது பிரெஞ்சு தொண்டு நிறுவனம் சொல்வதுபோன்று உண்மையிலேயே அவர்களுடைய நோக்கம் அநாதைச் சிறுவர்களுக்குப் புணர்வாழ்வு கொடுப்பதா? அல்லது உள்நாட்டுப்போரால் பாதிக்கபட்டிருக்கும் டார்·பர் பக்கம் உலக நாடுகளின் கவனத்தைத் திருப்புவதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் இரண்டுமே உண்மையில்லை, கடத்தப்படவிருந்த சிறுவர்கள் அநாதைகள் இல்லை. குழந்தைகளின் ஏழைப் பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளை ஐரோப்பாவிற்குச் கொண்டு சென்று நன்கு வளர்க்க விரும்புகிறோம், பிறகு திரும்ப அனுப்பிவிடுவோம் என்றெல்லாம் சை வார்த்தைகளைக் கூறி மயக்கியிருக்கிறார்கள். தவிர அக்குழந்தைகள் பிரச்சினைக்குறிய டார்·பூர் பிரதேசத்துக் குழந்தைகளும் அல்ல அதன் எல்லையிலுள்ள சாடு நாட்டைச் சேர்ந்த கிராமத்தின் குழந்தைகள்.
வேறு சில சந்தேகங்களும் எழுகின்றன அதாவது ஏன் அக்குழந்தைகள் சிறுவர் விபச்சாரத்திற்காகவோ அல்லது மனித உறுப்புகளுக்காகவோ(தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஒரு மருத்துவர்), கடத்தப்பட்டிருக்கக்கூடாது? அனைத்துக்கும் மேலாக இன்றைய தேதியில் ஐரோப்பிய நாடுகளில் தத்தெடுப்பதென்பது இலாபகரமான தொழில் அல்லது வியாபாரம். இத்தனைச் சந்தேகங்கள் இருப்பதால் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் தண்டிக்கப்படத்தானே வேண்டும் அதுதானில்லை. சாடு அரசாங்கம் தொண்டு நிறுவனத்தினரை கைது செய்த போது அனைத்துத் தரப்பினரும் அவர்கள் தண்டிக்கப்படக்கூடியவர்கள் என்றே நினைத்தனர். ஆனால் நடந்தது வேறு. இங்கேதான் நான் ரம்பத்தில் குறிப்பிட்டதுபோல ஆப்ரிக்க நாடுகளுக்கேயுரிய பிரச்சினைகள் மூக்கை நுழைக்கின்றன. 1960ம் ண்டுவரை சாடு பிரெஞ்சு காலனியாக இருந்தது. தற்போதைய அதிபர் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதே பிரெஞ்சு அரசாங்கத்தின் தயவில். எதிர்ப்பாளர்கள் எப்பொழுதெல்லாம் அதிபருக்கு எதிராக கலவரம் செய்து, ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்களோ அப்போதேல்லாம் பிரெஞ்சு அரசாங்கம் தனது படையை அனுப்பி அதிபரைக் காப்பாற்றி வருகிறது. எனவே Arche de Zoe அமைப்பாளர்கள் சாடில் தீர்ப்பு கூறப்பட்டு அங்கே தண்டனையை அனுபவிக்காமல் பிரெஞ்சு சிறைக்குக் கொண்டுவரப்பட்டு, கடைசியில் சாடு அதிபர் கருணையுடன் மன்னிப்பு வழங்க இன்றைக்குச் சுதந்திர பறவைகள். கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு செய்தி குழந்தைகளைக் கடத்த Arche de Zoe தொண்டு நிறுவனத்திற்கு(?) உதவிய விமானம் பிரெஞ்சு அரசாங்கத்திற்குச் சொந்தமானது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------1. மேற்கு சூடானைச் சேர்ந்த பல்வேறு பழங்குடிகளைச் சேர்ந்த பிரதேசம், பலகாரணங்களை முன்னிட்டு 2003லிருந்து அவர்களுக்குள் யுத்தம் நடந்துவருகிறது, அவர்களில் ஒரு பிரிவினருக்கு சூடான் அரசாங்கத்தின் தரவு இருந்துவருகிறது, விளைவு, எண்ணற்றமக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள், உயிரிழப்பும் அதிகம். http://en.wikipedia.org/wiki/War_in_Darfur