வியாழன், 6 நவம்பர், 2008

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -2

Liberte? -Oui, Egalite? - Oui, Fraternite?.......
செவ்வியொன்றிற்கு எமெ செசேர் அளித்தப் பதிலைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். பிரான்சு நாட்டில் சுதந்திரமும் சமத்துவமும் இருக்கிறதென்றாவது ஓரளவு திருப்திபட்டுக்கொள்ளலாம் ( அவர் Oui- ஆம்- என்று சொல்லியிருந்தாலும் அதனை உச்சரித்தவிதமும், பார்வையில் தெறித்த எரிச்சலும் வேறாக இருந்தது) ஆனால் சகோதரத்துவம் என்ற சொல்லுக்கான பொருள் இங்கே கேள்விக்குறியாக இருக்கிறது என்பதுதான் அவர் சொல்ல வந்ததற்கான பொருள். எமெ செசேர் சமகால பிரெஞ்சு கவிஞர்களில் மிகமுக்கியமானவர், மிகை யதார்த்தவாதி, கவிஞர் ஆந்த்ரே பிரெத்தோனுக்கு நெருங்கிய நண்பர். Negritude என்ற சொல்லைப் படைத்தவர். உலகெங்குமுள்ள கறுப்பினமக்களின் ஏகோபித்த சுதந்திரமூச்சு. கடந்த ஏப்ரல் மாதம் 17ந்தேதி பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்றான மர்த்தினிக் பிரதேசத்தில் -அவர் பிறந்த இடத்தில் உயிர் பிரிந்தபோது, பிரான்சு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள், எதிர்கட்சி பிரமுகர்கள், படைப்பாளிகள், பிறதுறை சாரந்த விற்பன்னர்கள்ளென பலரும் கண்ணீர் சிந்தினர், நாடுமுழுக்க துக்கம் அனுசரிக்கப்பட்டது. வழக்கம்போல சிந்திய கண்ணீரில் முதலைகளுக்கும்(எங்குதானில்லை) பங்குண்டு- யார் மனிதர் எவை முதலையென்பது பரம்பொருள் அறிந்த ரகசியம் - ஆமென்.
நாகரீகத்திலும் பண்பாட்டிலும் வளர்ந்திருப்பதாக மனித இனம் மார்தட்டிக்கொள்ளும் இந்த நூற்றாண்டிலும், ஆதிக்கமும், அதிகாரமும்- திக்கற்ற பல மனித சமூகங்களின் மண்ணோடும், உணர்வோடும் இசைந்த வாழ்வியல் நெறிகளை, விழுமியங்களை ஓசையிடாமல் அழித்துவருகின்றன என்பது உலகமறிந்த உண்மை. அவை காப்பாற்றப்படவேண்டுமெனக் குரல் எழுப்புகிறவர்களும் இல்லாமலில்லை. கவிஞர் எமெ செசேர், ஒடுக்கப்பட்டவரினம், தம் மரபுகள் குறித்ததான மதிப்பீட்டில் நியாயமான அணுகுமுறையை வற்புறுத்தியவர். ஆக அவரது கவிதை, மற்றும் அரசியல் பங்களிப்பென்பது அவர் பிறந்த மண் சார்ந்தது, அதன் பண்பாட்டு உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டது. 'நான் ஒரு கறுப்பன், கறுப்பன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்', என்றவர்.
"எனது நீக்ரோகுணம் ஒரு பாறையோ அல்லது பகற்பொழுதின் கூக்குரலைக் காதில் வாங்காதவொரு ஜடமோஅல்ல எனது நீக்ரோகுணம் குருட்டு பூமியில் விழுகிற அமில மழையுமல்ல எனது நீக்ரோ குணம் உயர்ந்த கோபுரமுமல்ல பெரிய தேவாலயமுமல்ல அது பூமியின் செங்குருதியிற் தோயும் அது வானில் கஞ்சாப்புகையில் மூழ்கும் பொறுமையினாலுற்ற பொல்லாங்குகளை இனங் கண்டிடும்..." (Le cahier d'un retour au pays natal) எனத் தொடரும் இக்கவிதை அவரது மிக முக்கியமான படைப்புகளிலொன்று. எமெ செசேரைக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள அவர் பிறந்த மர்த்தினீக் பிரதேசத்தினைப் புரிந்துகொள்ளவேண்டும். மர்த்தினீக் பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான நான்கு கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்று, இதர பிரதேசங்கள்: குவாதுலூப், பிரெஞ்சு கயானா, ரெயூனியோன். இவற்றை நேற்றுவரை DOM-TOM(1) என்று அழைத்து வந்தவர்கள் சமீபகாலமாக DOM-ROM (2)ou DROM என்றழைக்கிறார்கள். பெயரிலும், அரசியல் சட்டத்திலும் கொண்டுவந்த மாற்றங்கள், அம்மண்ணின் பூர்விகக் குடிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியதா என்றால் இல்லை. இங்கே வருடமுழுக்க சூரியனுண்டு மக்களின் வாழ்க்கையில்தான் சூரியனில்லை. மேற்குறிப்பிட்ட நான்கு பிரதேசங்களும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின்கீழ் காலனிகளாக இருந்தவை, பிற காலனி நாடுகள் விடுதலை அடைந்தபோதும், கறுப்பின மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பிரதேசங்களை விடுவிக்காமல் பிரான்சு அரசு சொந்தமாக்கிக்கொண்டதற்கு முக்கிய காரணம் பூளோக ரீதியிலான அவற்றின் அமைப்பு. பிரதான பிரதேசத்திற்கு(Metropole)(3) அரசியல், பொருளாதாரம், ராணுவம் என பல முனைகளிலும் இலாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக அட்லாண்டிக், பசிபிக், இந்தியபெருங்கடலென்று சிதறிக்கிடக்கிற பல்லாயிரக்கணக்கான மைல்களைக்கொண்ட கடற்கரைப் பிரதேசங்களைப் பயன்படுத்திக்கொண்டு அணு ஆயுத சோதனைகள் நடத்தவும், வலிமை மிக்க கடற்படையை அமைத்துக்கொள்ளவும், உலக நாடுகளின் அரசியலை அருகிலிருந்து மோப்பம் பிடிக்கவும் முடிகிறது. பொருளாதார இலாபங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் சுற்றுலாத் துறையை மட்டும் நம்பி ஜீவிக்கிற நாடுகள் பல. அவற்றிற்குப் போட்டியாக இருக்கும் இப்பிரதேசங்கள்(DROM), பிரான்சு நாட்டுக்கு கொடுப்பது அதிகம், கொள்வது குறைவு. உலகமெங்கும் சுதந்திரம் சுதந்திரம் என்ற குரல் கேட்கிறதே, இங்கே என்னவாயிற்று என்ற சந்தேகம் எழலாம், "வெள்ளைக்காரனே தேவலாம்", என்று சொல்ல இந்தியாவிற் கேட்கிறேன். அப்படியான மன நிலையிற்தான் இவர்களைப் பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருக்கிறது. நிறைய பிரெஞ்சுக்காரர்களை அதாவது வெள்ளைத்தோல் மனிதர்கள் இப்பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்- பெரும் முதலாளிகள் இவர்கள்தான், ஓய்வு நேரங்களில் அவர்கள் அரசியலும் பார்க்கிறார்கள், உள்ளூர் மக்கள் அவர்களுக்குத் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு உள்ளூர் தலைவர்களும் உண்டு. தீமிதிக்கிற காவடி எடுக்கிற இந்திய வம்சாவளியினரையும் சேர்த்து பல்வேறு இனத்தவர்கள் கலந்து வாழ்கிறார்கள், உணர்வால், பண்பாட்டால் வேறுபட்ட மக்களை மேய்க்கச் சுலபமாக முடிகிறது. உதாரணமாக பிரெஞ்சுக் கயானாவில் தென் அமெரிக்காவிலுள்ள அத்தனை இனத்தவர்களும் இருக்கிறார்கள், ரெயூனியனை எடுத்துக்கொண்டால் ஆப்ரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், வட இந்தியர்கள், தமிழர்கள், இந்திய முஸ்லீம்கள்- பிறபகுதிகளிலும் அதுதான் நிலைமை, கூடுதலாக வியட்நாம், இந்தோனேசியா, மடகாஸ்கர் மக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். தவிர பிரான்சு அரசு நிர்வாகப் பிரதேசங்களையும் தந்திரமாக கலைத்துப் போட்டு ஆள்கிறது. ஆப்ரிக்க இனத்தவரான பூர்வீகமக்களுக்குக் குடியும் கூத்தும் வேண்டும், தங்குதடையின்றி கிடைக்கிறது, இப்பிரதேசங்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதெல்லாம் கண்துடைப்பே. பிரான்சிலுள்ள இதரப் பகுதிகளோடு ஒப்பிடுகிறபோது இங்குள்ள அவலம் விளங்கும்: ஐம்பது விழுக்காட்டிற்குக் கூடுதலான மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். மருத்துவ அடையாள அட்டையான -Carte Vitalஐ - மர்த்தினீக் வாசி அறிந்ததில்லை. பிராதான பிரதேசத்தில் ஏழைகளுக்கான மருத்துவச் செலவு(Couverture Medicale Sociale) முழுக்க முழுக்க அரசு சார்ந்தது, இப்பிரதேச மக்களுக்கு பட்டைநாமம். பிரெஞ்சு மெட்ரோபோலில் (Mainland) குறைந்த பட்ச தனி நபர் ஊதியம் 1300 யூரோ என்றால், இங்கே 600 யூரோ...உணவுப் பொருட்களுக்கான விலைகள் சராசரி Dom-Tom வாசியால் தொடமுடியாதவை. எல்லாவற்றிற்கும் மேலாக இப்பிரதேசங்களைச் சேர்ந்தமக்கள் அரசியல் சாசனப்படி பிரெஞ்சு குடிமக்கள், ஆனால் மெட்ரோபோலுக்கு அதாவது பிரதான பிரான்சு நாட்டுக்குள் நுழைகிறபோது அவர்களும் வேறு நாடுகளிலிருந்து பிரான்சுக்குப் பிழைக்கவந்த மக்கள்போலவே நடத்தப்படுகிறவர்கள்.
பிரெஞ்சு காற்பந்தாட்ட முன்னணி வீரர்களில் ஒருவரான லிலியாம் துராம் ஒரு முறை சொன்னது, " எங்கள் பிரதேசத்தில் இருக்கிறபோது பிரெஞ்சுக் காரன் என்ற நினைவுடன் இருந்தேன், ஆனால் மெட்ரோபோலுக்கு வந்ததும் அந்நியனாக உணருகுகிறேன்".
நன்றி: யுகமாயினி
-------------------------------------------------------------------------------------------------------1. Departement d'outre-mer - Territoire d'outre-mer.2. Depaartment Region d'outre-mer2. Metropole - Mainland

கருத்துகள் இல்லை: