சனி, 20 டிசம்பர், 2008

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்-5

"எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டுவந்து சேர்த்தார்கள்? தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் மீது பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி அமைத்துவிடவில்லை. உன்னதமான பிரான்சின் கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி, எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை" என்று பிரபஞ்சன் பிரெஞ்சு தமிழர்கள் குறித்து வருந்தியதை நினைத்துப் பார்க்கிறேன். "ஜவஹர்லால் கூறிய பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச் சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்புடைய தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சில பிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச் பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன என்பது மெய்தான்" என்று புதுச்சேரி பிரெஞ்சு பண்பாடு குறித்த அவரது கவலைகளையும் புரிந்து கொள்கிறேன்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாகவே புதுச்சேரியில் பிரெஞ்சு கலாச்சாரம் நலிவுற்று வந்திருக்கிறது, மெல்ல மெல்ல புற்றுநோய்போல வளர்ந்து அதை படுக்கையிலும் கிடத்திவிட்டது, இன்றோ நாளையோ மரணம் நிச்சயம். ஒருவன் உயிரோடிருக்கும் காலத்தில், அவனைப்பற்றிய பிரக்ஞையின்றிருக்கும் உறவுகள் சில, செத்தபிறகு தேடிவரும்; வீட்டுத் தாழ்வாரத்தில் நாற்காலிபோட்டுக்கொள்ளூம்; எரிக்கவோ? புதைக்கவோ? என்று துரியோதன அன்புகாட்டும், அதைத்தான் புதுச்சேரி அரசாங்கமும், பிரெஞ்சு தமிழர்களும் நாளைக்குச் செய்ய இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்றாக அல்லது நீட்சியாக மற்றொரு விழுப்புரத்தையோ, மற்றொரு கடலூரையோ நினைவுபடுத்தும் புதுச்சேரி மாநிலத்தில் தமிழ்நாட்டைவிட கூடுதலாக அவலங்கள் மலிந்திருக்கின்றன. பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள், பிணங்கள் மலிந்துவிட்டன, தின்பதற்குச் சாத்திரங்கள்தானில்லை. சொந்த மண்ணையும், மொழியையும் பொருளாதாரத்திற்காகத் துறந்து புலம்பெயர்ந்த என்னைப்போன்றவர்களுக்கு, இந்த மண்ணைக் குறித்து பேச என்ன யோக்கியதை இருக்கிறதென்கிற புளித்துப்போன கேள்வியும், புதுச்சேரி மண்ணில் சொல்லப்போனால் பிரெஞ்சு மண்ணில் வாழும் சராசரி தமிழனைக்காட்டிலும் மொழிக்கும், மண்ணிற்கும் ஏதோ செய்திருப்பதான கொழுப்பும் என்னை அப்படிப் பேச வைக்கிறதெனலாம். கொடுத்தோம், கொண்டோம் என்பதுதான் வாழ்க்கை. ஒருவர் இழப்பு மற்றவர் அளிப்பினால் ஈடுசெய்யப்படவேண்டும். பிரிட்டிஷ் இந்திய வரலாறு, பிரெஞ்சு இந்திய வரலாறு, ஒப்பிட்டுப் பார்க்கிறேன். சுமார் மூன்று நூற்றாண்டுகள் அடிமைகளாக இருந்து கற்றது என்ன பெற்றது என்ன? பிரெஞ்சு மக்கள் எப்படி? அவர்கள் அரசியலென்ன? பண்பாடென்ன? மொழி, கலை, இலக்கியவெளியில் அவர்கள் செயல்பாடுகளென்ன? அந்த எசமானர்களிடமிருந்து உள்ளூரான புதுச்சேரியிலும், புலம்பெயர்ந்து வாழ்கிற பிரான்சிலும் பிரெஞ்சு தமிழ்மக்கள் என்று சொல்லிக்கொள்கிற நாங்கள் தெரிந்துகொண்டதென்ன? புற வளத்தைக்கூட்டிக்கொண்ட நாங்கள் அகத்தில் வளர்ந்தோமா? அவர்களைப்போல கைகுலுக்கவும், தோள் உயர்த்தவும் அறிந்த நாங்கள் அவர்கள் மொழி வளத்தை அறிந்திருக்கிறோமா? ஒயினையும், அதரங்களையும் சுவைக்கக் கற்ற நாங்கள் அவர்கள் இலக்கியத்தை சுவைத்திருக்கிறோமா, கலையைக் கொண்டாடியிருக்கிறோமா? அக் கலாச்சார சன்னலைப் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் திசைக்காய்த் திறந்திருக்கிறோமா? அனைத்துக்கும் மேலாக பிரபஞ்சன் ஆதங்கப்படுவதைப்போல கண்ட குப்பைகளிலும் தெளிவு பெற்றிருக்கிற எங்களுக்கு, பிரெஞ்சு மக்களுடைய வாழ்க்கை நெறிகளில் தமிழருக்கான பயன்பாடு உடையது எது? என்பதில் தெளிதல் உண்டா என்றெல்லாம் என்று கேட்டுப் பார்க்கிறேன். இக்கட்டுரையில் சொல்லவிருப்பது எதுவும் மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலல்ல, மாறாக பிரான்சு நாட்டையும், பிரெஞ்சுக் காரர்களையும்(அப்படியாரேனும் இருக்கிறார்களா என்ன?), பிரெஞ்சுத் தமிழர்களையும் கொஞ்சமாக அறிமுகப்படுத்தும் முயற்சி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலே கருவாகி Francorum, Francie, Franc, (இந்த ·பிராங்க் என்ற சொல்லே பரங்கியராக நம்மிடம் உருமாறி இருக்கிறது) என்றெல்லாம் சொல்லப்பட்டு, பன்னிரண்டாம் நூற்றாண்டின் கடைசியில் 'France' என்று அழைக்கத் தொடங்கியதாக வரலாறு. பிரான்ஸ் என்றதும் 'நாகரீகம், புரட்சி' என்பதுதான் உலகில் எவர் மனதிலும் உதிக்கக்கூடிய முதற் பதிவுகள். இவ்விரு சொற்களுமே அரசியல், கலை இலக்கிய வெளிகளில் விளைந்த புதிய சிந்தனைகளுக்கு அடையாளமாக இருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் உலகெங்கும் விளைவித்த பாரிய தாக்கங்கள் இன்றைக்கும் எதிரொலிப்பதை அறிவோம். சிந்தனையிற் புரட்சி என்பது மனித குலத்தை முன்நகர்த்தும் உந்து சக்தி. கலகக் குரலில்லாமல், ஒரு நாட்டின் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் வாழ்வியல் நெறிகள் செப்பம் அடைவதில்லை. சுயநலமற்ற மனிதர்கள் எக்காலத்திலுமில்லை, அவ்வாறான மனிதர்களிடம் பேராசையும், அதிகாரமும் இணைந்தால் என்ன நடக்கும், அதற்கு இடைஞ்சலாக இருப்பவர்களிடம் யுத்தம் நடத்துவார்கள். முடிமன்னர்கள் அதைத்தான் செய்தார்கள். காலம் எதுவாயினும் ஆள்கின்றவனுக்கு அதுமட்டுமே குறிக்கோள். பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயருடனும், ஸ்பானியர்களுடனும், இத்தாலியருடனும், ஜெர்மானியருடனும், யுத்தம் நடத்தியவர்கள், 30 ஆண்டுகள் போர், நூறாண்டுகள் போர்- என்றந்த கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் பெயருண்டு. சிரம் அறுக்கவும் அதைப் பார்த்து ரசிக்கவும் எந்த அளவிற்கு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். இப்படியொரு இரத்தப்புரட்சியை நடத்தமுடிந்ததன் பலனோ என்னவோ இலக்கியத்திலும், சிற்பத்திலும், ஓவியத்திலும் புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். "நுண்ணறிவுள்ள மனிதர்களெல்லாம் பிரெஞ்சுக்காரர்கள் என்று பெருமிதங்கொண்டவன்" நெப்போலியன். தமிழர்கள் குறித்த பெருமைகள் நமக்கில்லையா? பிரெஞ்சுக்காரர்கள் என்ற முகமூடியை அணிகிறபோது ஒரு முகமும், அதனை அகற்றிய தனிமனிதராக பார்க்கிறபோது அவர்களுக்கு மற்றொரு முகமும் உண்டு. புதுச்சேரியை அறிந்தவர்கள், "வீதி அழகே தவிர நீதி அழகில்லை" என்று சொல்வார்கள். பிரெஞ்சுக் காரர்களும் இதற்கு ஒருவகையிற் காரணமென்பதற்குக் கீழ்க்கண்ட உண்மைச் சம்பவம் உணர்த்தக்கூடும்.
1706ஆம் ஆண்டு. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லாமல், 'கிழக்கிந்திய பிராஞ்சு கூட்டுறவுச் சங்கம்' என்றிருந்த அமைப்பின் முதல் நிர்வாகி பிரான்சுவா மர்த்தென் காலமாகிறார். பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லூயி, கியோம் ஆந்த்ரே எபேர் என்பவரை மாற்று நிர்வாகியாக அறிவிக்கிறார். இம் மனிதர் அரசகுடும்பத்துக்கு வேண்டியவர். ஆளும் வர்க்கத்துக்கு வேண்டியவரென்றால் அத்தனையும் அடக்கம். இவர் பதவி ஏற்று, புதுச்சேரி துறைமுகத்தில் வந்திறங்கியபோது, கூட்டுறவு சங்கத்தின் தரகராக வாங்கவும் விற்கவும் பணியாற்றியவர் முத்தியப்ப முதலியார். ஆந்த்ரே எபேர் ஒரு நாள் அவரிடம் ஐம்பது பேழைகளடங்கிய பவழங்களை மனங்கு ஒன்றுக்கு 120 வராகன் விழுக்காடு விற்றுக் கொடுக்கும்படி முத்தியப்ப முதலியாருக்குக் கட்டளை இடுகிறார். அவர் வியாபாரிகளை அழைத்துக்காட்டுகிறார். வியாபாரிகள் பரிசோதித்துப் பார்த்து 106 வராகனுக்குமேல் கொடுக்க முடியாதென்கின்றனர். ஆந்த்ரே எபேருக்கோ 110 வராகனுக்குக் குறைவாகக் கொடுக்க விருப்பமில்லை. பொருளை வாங்காமல் வியாபாரிகள் புறப்பட்டுவிட்டனர். முத்தியப்ப முதலியாரின் வியாபாரத் திறனை சந்தேகிக்கிற எபேர், அவரை நீக்கிவிட்டு நைநியப்பப் பிள்ளை என்றொருவரை நியமிக்கிறார். இப்புதிய தரகரின் தலையீட்டினால், வியாபாரிகள் தங்கள் ஆரம்ப முடிவுக்கு மாறாக 108 வராகன் கொடுக்க முன் வருகிறார்கள். இரண்டு தரப்பிற்கும் திருப்தி. இந் நிலையில் முத்தியப்ப முதலியார் தரகு வேலையிலிருந்து நீக்கபட்டச் செய்தி, பிரான்சிலிருந்த அரசாங்கத்திற்கு, அப்போதைய தகவல் பரிமாற்ற அளவீட்டின்படி மிகத் தாமதமாகக் கிடைக்கிறது. அவர்களுக்குக் கோபம், அதிலும் கிறிஸ்துவரல்லாத ஒருவரை சங்கத் தரகராக நியமித்திருந்தது, ஆகப் பெரிய தப்பு. நைநியப்பப் பிள்ளையைப் பதவிலிருந்து விலக்கிய எபேரைப் பிரான்சுக்குத் திரும்ப அழைத்துக் கொள்கிறார்கள். பியெர் துய்லிவியே என்பவரைப் புதுச்சேரி கூட்டுறவு சங்கத்தின் முதல் அதிகாரியாக இப்போது நியமிக்கிறார்கள். சங்கத்தின் தரகராக கிறிஸ்துவர் ஒருவரே இனி நியமனம் செய்யப்படவேண்டும் என்றும் அறிவிக்கிறார்கள். புதுச்சேரிக்கு வந்த துய்லிவியேவுக்கு உள்ளூர் பிரச்சினை வேறுமாதிரியாக இருக்கிறது. நைனியப்பப் பிள்ளை பணியில் திறமைசாலியாக இருந்தார், அவரது செல்வாக்கு உள்ளூர் வியாபாரிகளிடம் மாத்திரமன்றி சுற்றிலுமிருந்த மொகலாய பிரதிநிதிகளிடமும் பரவியிருந்தது. புதுச்சேரி கூட்டுறவு சங்கத்தின் அத்தனை பிரச்சினைகளிலும் அவருடைய தலையீடின்றி தீர்வு காணமுடியாது போலிருந்தது. நைநியப்ப பிள்ளையின் சேவையும் வேண்டும், பாரீஸிலிருக்கும் அரசவை எடுத்த முடிவையும் நிறைவேற்றவேண்டும். பியெர் துய்லிவியே பார்த்தார். கிறிஸ்துவரான சவரி முதலியாரை மற்றொரு தரகராக நியமித்துவிட்டார், இவர் பதவி விலக்கப்பட்ட முத்தியப்ப முதலியாரின் மருகர். மன்னரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட எபேர் பிரான்சுக்கும் திரும்பிவந்ததும் அமைதியாய் இருந்தவரில்லை. தன்னை பதவி நீக்கம் செய்தது முறையல்ல என்று புலம்புகிறார். அரச குடும்பத்திலும், அரசவையிலும் அவருக்கிருந்த செல்வாக்கு, அவருடைய புதுச்சேரி நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. அவரது மகனுக்கும் புதுச்சேரி கூட்டுறவு சங்க நிர்வாகத்தில் பதவியொன்றை வாங்கிக் கொடுக்க முடிகிறது. புதுச்சேரிக்கு வந்த எபேர் மகன் தனது தந்தையால் தரகர் பணிக்கென்று நியமிக்கபட்ட நைநியப்பப் பிள்ளை செல்வாக்குடன் வாழ்வதைப் பார்க்கிறான். இயல்பிலேயே நைநியப்பப் பிள்ளை செல்வந்தராக இருந்தார். எபேர் மகன் நைநியப்பபிள்ளையை அழைத்தான் என் தகப்பனார் உமக்குக் கொடுத்த தரகு வேலையில் 40 000 வராகன் சம்பாதிப்பதாக அறிந்தேன், அதில் 10 000 வராகனையாவது எங்களுக்குக் கொடுக்கவேண்டும் என்கிறான். அவர் மறுக்கிறார், அவன் 5000 கேட்டு அதற்கு அவர் இணங்காமற்போக, கடைசியாக 3000ம் தந்தாற்போதும் என்கிறான். இவர் பிடிவாதமாக மறுப்பு தெரிவிக்கிறார். அவரது வளர்ச்சியில் பொறாமைகொண்டிருந்த தமிழர்கள் சிலரைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு குற்றச் சாட்டுகள் தயாரிக்கப்பட்டன. நைநியப்பப் பிள்ளை கிறிஸ்தவர் அல்ல என்பதால் கிறிஸ்துவ மதகுருமார்கள் குற்றச்சாட்டுக்குத் துணைபோகின்றனர். 1715ம் ஆண்டு ஜூன் மாதம் 5ந்தேதி நைநியப்பப் பிள்ளைக்கு எதிராக அளிக்கபட்டத் தீர்ப்பில் 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், 3 வருடம் சிறை தண்டனை பெறவேண்டுமென்றும், கூட்டுறவு சங்கப் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்திய வகையில் 8888 வராகன்களை நிர்வாகத்திற்குச் செலுத்தவேண்டுமென்றும், 4000வராகன் அபராதமென்றும், மூன்று வருட சிறைதண்டனைக்குப் பிறகு புதுச்சேரியைவிட்டு வெளியேற வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் சிறைவாசத்திற்குப் பிறகு மோரீஸ் தீவுக்கு அடிமையாய்ப்போகவேண்டுமென்றும் தீர்ப்பாகிறது. நைநியப்பபிள்ளைக்குப் பதிலாக கனகராய முதலியாரென்ற கிறிஸ்துவர் தரகராய் நியமிக்கபடுகிறார். அநியாயமாகத் தண்டிக்கபட்ட நைநியப்பபிள்ளை சிறையிலே இறக்கிறார். அவருக்கு மூன்று பிள்ளைகள். முதல் பிள்ளை குருவப்ப பிள்ளை. தந்தைக்கு இழைக்கபட்ட அநீதிக் களையப் படவேண்டுமென்று நினைக்கிறான், செல்வந்தன் என்கிற பின்புலம் பிரான்சுக்கான பயணத்தை இலகுவாக்குகிறது. பிரான்சுக்குச் சென்றவன் ராஜாவிடம் முறையிட்டான். மன்னரும், அரசாங்க முக்கியஸ்தர்களும் நியாயவான்களாக ஆனார்கள், நைநியப்பப் பிள்ளை உத்தமர் என்ற முடிவுக்கு வருகிறார்கள். தந்தைக்கு இழைக்கப்பட்டப் பழியைப் போக்க பறித்த உத்தியோகத்தை மகனுக்கு அளிக்கிறார்கள். குருவப்பப்பிள்ளை புதுச்சேரிக்கு வருகிறான். இப்போது பிரெஞ்சுகாரர்களின் ஆதரவும் அரவணைப்பும் இவன் திசைக்குத் திரும்பபுகிறது. பிள்ளை மீண்டும் வழக்குத் தொடுக்கிறான், இம்முறை நீதிபதிக்கு நைநியப்பப் பிள்ளை யோக்கியவனாகத் தெரிகிறார். அவரிடமிருந்த சொத்துக்களைப் பறித்து ஏலம்விட்டுக் கிடைத்த பத்தாயிரம் வராகன்களையும், அதற்கான வட்டியுடன் நைநியப்பப் பிள்ளை வாரிசுகளுக்குக் கொடுக்கத் தீர்ப்பாயிற்று. சரி நேற்றுவரை குற்றவாளியாக இருந்த நைநியப்பப் பிள்ளை உத்தமரானது எப்படி? அவரது மகன் குருவப்பப் பிள்ளைக்குத் திவான் பதவி தேடிவந்ததற்கு எது காரணம். வேறொன்றுமில்லை, நைநியப்பப் பிள்ளையின் மூத்தமகன் குருவப்ப பிள்ளை சாமர்த்தியசாலி, கிறிஸ்துவ மதத்தினைத் தழுவினால், பிரெஞ்சு நிர்வாகம் தீர்ப்பை மாற்றி எழுதுமென்று விளங்கிக்கொண்டான், வெற்றியும் பெற்றான்.

நன்றி: யுகமாயினி

கருத்துகள் இல்லை: