இரண்டு பிரெஞ்சு பெண்கள் சந்தித்துக்கொண்டால் பேச்சுக்கான முதல் கருப்பொருள் செல்லப்பிராணிகளைப் பற்றியதாகத்தான் இருக்கும். நாய்க்கு என்ன கொடுக்கிறாய், பூனைக்கு எந்த மருத்துவரிடம் போகிறாய், விடுமுறைக்கு இத்தாலிபோனபோது நாய் உன்னுடன் வந்திருந்ததா? இப்படி முடிவில்லாமல் கேள்விகள் நீளும். அவரவர் கணவன்மார்களின் நலனைத்தான் விசாரிக்கிறார்களோ என்று சந்தேகித்து வியப்புடன் ஒட்டுகேட்பதுண்டு, ஆனால் பதில்களில் வெளிப்படும் அக்கறையும், இழையும் ஆதங்கமும் தங்கள் சரிபாதிக்கானதல்ல என்பது விளங்கிவிடும். கீழைத் தேசத்து கணவன்மார்களின் நிலைமை பரவாயில்லையென நினைக்கத் தோன்றும்.
மேற்கத்திய ஆண்வர்க்கத்தின் முதல் எதிரியான நாய் பற்றிய கதையிது. சிவலிங்கம் சாட்சிசொன்னதுபோல, காலபைரவன் சாட்சியான கதை. பொய் சாட்சியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், இது நாய் சாட்சி. நாயைக் கண்டால் ஆக இளப்பமாக இருந்தது ஒருகாலம். 'நாயினும் கடையேன்' என்று சொல்லிக்கொண்ட மகான்களையெல்லாம் படித்திருக்கிறோம். குரைக்கிற நாய் கடிக்காதென்ற பழமொழியும் உண்டு. ஓர் ஆணுக்குப்பதிலாக நாயை மணந்து கொண்ட, பெண்ணுக்கு நேர்ந்த சௌகரியங்களைப் பேசும் மராட்டியமொழிக் கதைபற்றி நகைச்சுவை கலந்து பிரபஞ்சன் ஆற்றிய உரையும் நினைவிலிருக்கிறது. சீனாவில் நாயின் உபயோகம் வேறுமாதிரி இருக்கிறது. அங்கே சில மாகாணங்களில் நாய் இறைச்சியால் தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள் மிகப் பிரபலம் என்கிறார்கள். சீனர்களில் ஒரு பிரிவினர் நாய்க்கறியை விரும்பிச் சாப்பிடுகிறார்களாம். பாரம்பரிய மருத்துவக் குண உணவு வகைகளிலும் நாய் இறைச்சி சேர்க்கப்படுவதுண்டு என்கிறார்கள். இந்து கடவுள்களுக்கு வாகன ஏற்பாடுகளைச் செய்தவர்கள், இறக்குமதியில் ஆர்வம் காட்டாத சுதேசிகள் போலிருக்கிறது. உள்ளூர் தயாரிப்பாக இருந்தால், பிரச்சினை இருக்காதென்று நினைத்திருக்கலாம். ஒட்டகம், கரடியென்று ஆசைபடாமல், தங்கள் தெய்வங்களுக்கு ஆனை, சிங்கம், புலியென்ற வரிசையில், பைரவனுக்கு அல்லது வைரவனுக்கு நாய்வாகனம்.
சேலம் அரசு மருத்துவமனைகளில் நாய்க் கடிக்கு ஊசி போட வரும் நோயாளிகள் ரேஷன் அட்டையை அவசியம் கொண்டு வரவேண்டுன்று ஒருமுறை செய்தித்தாளில் வாசித்த ஞாபகம். நாய்க் கடி நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படுகிற இலவச ஊசிகளால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.15 கோடிவரை செலவாகிறதென்பதே அந்த நிபந்தனைக்கான காரணமென்று சொல்லப்பட்டிருந்தது. சேலம் மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "நாய்க்கடி மருந்து ஒன்றின் விலை ரூ.400. ஏழைகள் நலன் கருதி அரசு மருத்துவமனையில் இலவசமாக இந்த மருந்து வழங்கப்படுகிறது. வசதி படைத்தவர்களும் இங்கு வந்து இந்த ஊசியை போட்டுக் கொள்கின்றனர். இதை கட்டுப்படுத்தவே பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை உள்ளிட்ட சான்றுகள் கட்டாயம் கொண்டு வர வேண்டும்", எனச் சொல்கிறோம் என்றார். ஆற்றில் கொட்டினாலும், அளந்து கொட்டவேண்டுமில்லையா? தம்பதிகள் சண்டையில் முடியும் கடியையோ, அரசியல்வாதிகளின் கடியையோ, இலக்கியவாதிகளின் கடியையோ, இந்தச் செலவுக்கணக்கில் கொண்டுவந்திடக்கூடாதென்பதில் அரசுக்குள்ள அக்கறை நமக்குப் புரியாமலில்லை.
ஐரோப்பிய விமான தளங்களில் போதைமருந்து கடத்துபவர்களைப் பிடிக்க நாய்களை உபயோகிப்பதைப் பார்க்கிறேன். தாடி வைத்திருப்பவர்களையெல்லாம் பின்லாடன்களாகச் சந்தேகிக்கிற ஜார்ஜ் புஷ்ஷைப்போல அவை பண்ணும் கூத்து சுவாரஸ்யமாக இருக்கும். பெண்களைக் கண்ணீரில் நனைக்காத நாய்களைத் தொலைகாட்சி தொடர்களில் பார்த்திருக்கிறேன். புதுச்சேரிக்கருகே இருந்த எங்கள் கிராமத்தில் நடந்தது. அந்த நாட்களில், தெருவாசல் கதவுகள் எப்போதும் திறந்தபடி கிடக்கும். ஒரு வீட்டிற்கு பெண்பார்க்கவென்று அசலூர் மாப்பிள்ளையும், அவன் பெற்றோர்களும், சுற்றத்தாரும் கூடத்தில் அமர்ந்திருந்தனர். பெருசு ஒன்று, "பொண்ணை கூட்டி வாங்கம்மா, நேரமாவுதில்ல", எனக் குரல் கொடுத்தது, சட்டென்று அங்கே அமைதி கவிந்தது. பெண்ணை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தார்கள். தன்னைத்தான் அழைத்ததுபோல அடி பிசகாமல் நடந்து வந்து ஒற்றையாக அது நின்றது, தூண்களில் சாய்ந்தபடியும், நடு வாசலிலும் நிற்கிற விடலைப் பையன்களும், பெண்களும் கொல்லென்று சிரித்தார்கள். மாப்பிள்ளை பையன் நிமிர்ந்தவன், தானே கேலிப்பொருளாக்கப் பட்டிருப்பதுபோல உணர்ந்தான். திறந்தவீட்டில் நுழையும் வழக்கத்திற்கேற்ப அங்குவந்து தரிசனம் தந்த நாய்தான் அத்தனைக்கும் காரணம். "நம்ம மணியம்மை நாய்தான்", பெண்ணுக்குத் தகப்பன் பூரிப்புடன் சொன்னார். ஆக நாய்க்கு காமெடியும் வரும். சாஎலெஸ் ஷ¥ல்ஸ் என்ற எழுத்தாளர் ஸ்னூப்பி என்றொரு நாயை வளர்த்து வந்ததாகவும், அது விநோதமான குணங்கள் உடையதெனவும் சுஜாதா எழுதி படித்த நினைவு. அந்நாய்க்கு சிலரைப் பிடிக்கும்- ஒரு சிலரைப் பிடிக்காது. லூஸி' என்கிற பெண்ணைப் பிடிக்குமாம். "எவ்வளவு பிடிக்கும்?" என்று கேட்டால், வாலை விஸ் விஸ் என்று தீவிரமாக ஆட்டுமாம். மற்றவரைக்காட்டி "அவரை எவ்வளவு பிடிக்கும்?" என்று பேட்டால், வாலின் நுனியை மட்டும் ஆட்டுமாம். நான் சொல்ல இருப்பது நாயின் வாலாட்டும் விவகாரமல்ல, குரைப்பு விவகாரம் பற்றியது.
ஒரு கொலை வழக்கில் டல்மேஷன் நாயொன்றின் சாட்சிக்கு பிரான்சு நாட்டு நீதித்துறை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. நடந்தது இதுதான். இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஒர் அறுபது வயது மூதாட்டியொருத்தி பாரீஸ் நகரில் வீட்டில் தூக்கில் தொங்கியிருந்தாள். தடயவியல் பரிசோதனைகளின் முடிவில் கொலையென்று முடிவாயிற்று. புலன்விசாரணையில் இறுதியில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்திருக்கிறார்கள், விசாரணை அதிகாரிக்குள்ள பிரச்சினை, பிடிபட்ட குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களை ஒன்று திரட்டவேண்டும். குற்றம் நடந்தபோது, அங்கிருந்த ஒரே சாட்சியம் மூதாட்டியுடைய செல்லப்பிராணியான டல்மேஷன் நாய். வழக்குவிசாரணையை நடத்துகிற குற்றவியல் முதண்மை அதிகாரி, சம்பவத்தினை மறுகட்டமைப்பு செய்வதற்கு நாய் ஒத்துழைக்கவேண்டுமென்று கேட்டு நீதிமன்ற உத்தரவினைப் பிறப்பித்தார். அதன்படி கடந்த ஜூலைமாதம் குற்றம் சாட்டபட்ட இருவரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றனர். இருவரில் ஒருவரைப்பார்த்து நாய் குரைத்திருக்கிறது. நீதிமன்ற எழுத்தர் ஒருவர் அதைப்பதிவு செய்துகொண்டார், தொடர்ந்து புலன்விசாரணையை மேற்கொண்ட அதிகாரி, ஆவணப்படுத்திவருகிறார். தற்போதையை நிலவரத்தின்படி விசாரணையை முடித்தபிறகே வழக்குபற்றிய விபரம் முழுவதுமாக வெளியில் தெரியவரும்.
பிரெஞ்சு நீதித்துறை அமைப்பைச் சேர்ந்த ஒருவர், " எனக்கென்னவோ இதொரு அசாதாரண விஷயமாகத் தெரிகிறது. பிரான்சு நாட்டு நீதித்துறை வரலாற்றில் இதற்குமுன்பு நாயைச் சாட்சியாகவோ அல்லது விசாரணைக்குட்படுத்தியாகவோ சம்பவங்களில்லை. சில வருடங்களுக்கு முன்பு கனடாவிலோ அல்லது ஆஸ்த்திரேலியாவிலோ மணவிலக்கு வழக்கொன்றிர்க்கு, கிளியொன்றின் சாட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், ஆக எனக்குத் தெரிந்து விலங்குகளை சாட்சியாக எடுத்துக்கொண்ட வழக்குகள் வேறில்லை", என்கிறார். சரி விலங்குகளின் சாட்சிகளை எந்த அளவிற்கு நம்புவது? அதன் அடிப்படையில் வழங்கப்படும் நீதிக்குள்ள தகுதியென்ன, எனப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவரது பதில், " உண்மைதான் பொதுவாக பிறவிலங்குகளின் பங்களிப்பை நீதிவிசாரணையொன்றில் எப்படி எடுத்துக்கொள்கிறோமோ, அப்படித்தான் நாயின் சாட்சியையும் கருதவேண்டும், தவிர நாய் தனது குரலின் ஊடாக இதைத்தான் தெரிவிக்கிறது என திட்டவட்டமாக சொல்லமுடியாத நிலையில் அதுவொரு சாட்சியே இல்லை (null and void) என்றாகிறது, குற்றவாளி என சந்தேகிக்கப்படும் அல்லது நடந்த குற்றத்திற்கான சாட்சியாகக் கருதப்படும் ஒருவனைக் கண்டு நாய் குரைப்பதை யார் அர்த்தப்படுத்துவது, எப்படி எடுத்துக்கொள்வது? இந்நிலையில் சட்டத் தன்மையற்ற நாயின் குரைப்பை சாட்சியாகக்கொள்வதும் அதன் அடிப்படையில் வழக்குச் சம்பந்தமான ஆவணத்தைத் தயாரிப்பதும் அவசியமாவென, விசாரணை அதிகாரி யோசிக்க வேண்டுமென்கிறார், ஆகத் தற்போதைக்கு இந்த வழக்கில் குரைத்த டல்மேஷன் நாய் சட்டப்படிக் கடிக்கபோவதில்லை- குரைக்கிற நாய் கடிக்காதென்பது பழமொழி.
இந்தியா வல்லரசாக வளர்ந்துவருவதன் காரணமோ என்னவோ வற்றலும் தொற்றலுமாக இருந்த காலமெல்லாம் போய்விட்டது, இப்போது நாய்கள் குறிப்பாக தெரு நாய்கள் எண்ணிக்கையில் அதிகரித்து உடல் மினுங்க வலம் வருவதை புதுச்சேரியில் கண்டேன். அவைகளும் அரசியல்வாதிகள், நடிகர்களைப்போல கூட்டம் சேர்க்கின்றன, சேட்டைகள் செய்கின்றன, சத்தமிட்டு விவாதத்திற்கு அழைக்கின்றன, எதிர்க்குரல் கொடுக்கின்றன, ஆர்பாட்டம் செய்த வேகத்தோடு அடங்கிப்போகவும் செய்கின்றன. மரியாதைக்கும் பஞ்சமில்லை சராசரி மனிதர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள், பயத்துடன் ஒதுங்கிப்போகிறார்கள். புதுக்கோட்டையில் நகராட்சி கவுன்சிலர் ஓருவரை தெரு நாய்கள் ஓட ஓட விரட்டியிருக்கின்றன. அவரது பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கையில் அதிகரித்து மக்களை அடிக்கடி அச்சுருத்தி வந்தனவாம். இந் நிலையில் கடை வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிந்த கவுன்சிலரை தெரு நாய்கள் சேர்ந்து துரத்தி இருக்கின்றன. நாய்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஒடியபோது தடுமாறி கீழே விழுந்ததில் அவரது கை எலும்பு முறிந்ததாம். நீதி: மனித சாட்சிகள் நின்று சாதிக்க முடியாததை, நாய்கள் ஓடிச் சாதிக்கும். மனித சாட்சியே இல்லை என்ற நிலையில் பிரான்சு நீதித்துறை விசாரணை அதிகாரி நாயைக் கூப்பிட்டிருக்கிறார். "ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது" என்ற கொள்கையின் அடிப்படையில் பார்க்கிறபோது, குற்றவியல் நீதிவிசாரணை அதிகாரியின் இம்முயற்சி அர்த்தமற்றதுதான் ஆனால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதியும் சட்டமும் இருக்கிற நாடுகளில் இப்பிரச்சினைகளை எப்படி கையாள்வது?
இந்தியத் திருநாட்டில் மனித சாட்சிகளை அச்சுறுத்துவதும், விலைகொடுத்து வாங்கப்படுபதும் சர்வ சாதாரணம். குப்பனுக்கும் சுப்பனுக்கும் எதிராக, சாட்சிகள் தைரியமாக பேசும், அப்பாவி குற்றவாளிகளுக்கு எதிராக குற்றவழக்குத் தொடர்ந்தவர்கள் குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியும். ஆனால் சட்டம் நெருங்க முடியாதத் திருக்கூட்டம் ஒன்றிருக்கிறது, மனித சாட்சிகளால் துரத்த முடியாத கூட்டமது. அக்கூட்டத்தை அவதானித்தால் அரசியல்வாதிகள், கோடியில் புரளும் ஆன்மீகவாதிகள், நடிகர்கள், பெருவியாபரிகள் அங்கம் வகிப்பார்கள். தீர்ப்பு வழங்கும் நீதித்துறையும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதற்கு சாட்சிகள் உண்டு(?). மனித சாட்சிகள் துரத்தமுடியாத அவர்களை நாய்கள்தான் துரத்தவேண்டும், விலங்குகள்தான் தண்டிக்க வேண்டும். *****
நன்றி: யுகமாயினி
ஞாயிறு, 21 டிசம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கருத்துரையிடுக